Monday, November 21, 2011
திருக்குறளில் கொல்லாமை அறம்
திருக்குறளில் கொல்லாமை அறம்
தமிழ் இலக்கியத்தில் ஒப்பில்லா மணியாய் திகழ்வது, திருக்குறளாம்.
“Books are the reflection of the society” என்பார்கள். நூல் ஆக்குவோர்
தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ தாங்கள் வாழ்ந்த காலத்தின் சமூக அமைப்புகளையும், சமூக பண்பாட்டுக் கூறுகளையும் தங்கள் எழுத்தில்
படம் பிடித்துக் காட்டுவார்கள். அங்ஙனமே, திருக்குறளாசிரியரும் அற்றை
நாளில் உள்ள சமூக அமைப்புகளையும், சமூக பழக்க வழக்கங்களையும்
நமக்கு தன் குறள் பாக்களில் படம் பிடித்துக் காட்டுகிறார்.
கொல்லாமை அறம்
அகிம்சை அல்லது கொல்லாமை என்ற அறம் திருக்குறளின் அடிநாதம்
எனலாம். கொல்லாமை என்பது கொல்வதின் எதிர்ப் பதம் என்ற கருத்தில்
அமைந்ததன்று. கொல்லாமை என்பது அறங்களின் தொகுப்பு. உடலாலும்,
மனத்தாலும், மொழியாலும் பிறருக்கு (பிற உயிர்களுக்கு) யாதொன்றும்
கெடுதலில்லாது அமைவது அகிம்சை எனப்படும்.
அகிம்சையின் சாரமாக எழுதப்பட்ட அதிகாரங்களாவன,
1. அருளுடைமை
2. புலால் மறுத்தல்
3. தவம்
4. வாய்மை
5. இன்னா செய்யாமை
6. கொல்லாமை
ஆகிய அதிகாரங்களில் அடிநாதமாக திகழ்வது அகிம்சை என்னும் கொல்லாமை
அறமே.
சிலர், இவ்வதிகாரங்கள் துறவறத்தார்க்குச் சொல்லப்பட்டது என்பார்கள்.
துறவற இயலில் கூறப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். இதனால்,
அவ்வதிகாரங்களில் கூறப்பட்ட கருத்துக்கள் இல்லறத்தாருக்கு இல்லையென்று
கூறிவிட முடியுமா? இதில், தவம் என்ற அதிகாரம் தவிர்த்து, மற்ற
அதிகாரங்கள் அருளுடைமை, வாய்மை, இன்னா செய்யாமை, புலால்
மறுத்தல் ஆகியவை இல்லறத்தார்க்கும் பொதுவே. பொதுவாக, அதிகாரங்கள் உரையாசிரியர்களால் தொகுக்கப்பட்டது என்பது அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. குறளுக்கு ”தருமர்” உரைதான் முதல் உரை.
இவர் சமணராகவோ அல்லது பெளத்தராகவோ இருக்கலாம். தருமர்
என்ற பெயர் இருசாராருக்கும் உரித்து. எனினும், சமணர் என்று
பெரும்பாலான அறிஞர்கள் கூறுப.
மணக்குடவர்
தற்போது கிடைத்துள்ள உரைகளில் முதல் உரை மணக்குடவர் உரை.
இவர் சமணர் என்பது வெள்ளிடை மலை. ஆயினும், இவர் உரை முழுதும்
கிடைத்தில. முதன் முதல் திரு.வ.உ.சிதம்பரனார் என்பார் உரை கிடைக்காத
உரைகளுக்கு (பரிமேலழகர் உரையைச் சார்ந்து) தன் உரையை எழுதிப்
போந்தார். இதனால் எது, எது மணக்குடவரின் உண்மையான உரை என்பது
இலைமறை காய்மறைதான். (இவற்றை பற்றி வேறொரு கட்டுரையில்
பார்க்கலாம்)
வாய் உபதேசம்
அற்றை நாளில், சமண தரிசனம், பெளத்த தரிசனம், வேத தரிசனம்1 மற்றும்
ஆசிவக தரிசனங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றையும் குறள் பதிவு
செய்திருக்கிறது. பெளத்தம், சமணம் ஒத்த மூலம் கொண்டிருந்தாலும்,
அவற்றுள் வேறுபாடுகள் தெற்றென விளங்கும். அதுபோல, கொல்லாமை
அறம் பெளத்தத்திற்கும், சமணத்திற்கும் பொதுவான அறம் என்றாலும்,
கொல்லாமையால் விளங்கும் புலால் மறுத்தலில் பெளத்தம், சமணத்திலிருந்து வேறுபடுகிறது. எங்ஙனமெனில், பெளத்தர்கள் தங்கள் கைகளில் ஓர்
உயிரையும் கொன்று, அதில் கிடைக்கும் ஊன் உணவினை உண்ண
மாட்டார்கள். ஆனால், பிறர் யாராவது ஓர் உயிரைக் கொன்று ஊன்
உணவினைக் கொடுத்தால் அவற்றை புசிப்பார்கள். அதனால் கொல்லாமை
அறம் என்பது அவர்களுக்கு வெறும் வாய்மொழி உபதேசம் மட்டுமே.
இவற்றையும் குறள் கண்டித்திருக்கிறது.
விலைப்பொருட்டால் வரும் ஊன்
புலால் மறுத்தல் அதிகாரத்தில் வரும் குறள்,
“தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்” – குறள் – 256
மணக்குடவர் உரை:
தின்னுதற்காக உலகத்தார் கொள்ளாராயின், விலைக்காக ஊன் விற்பார்
யாரும் இல்லை.
இது கொன்று தின்னாது விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை
யென்றார்க்கு, அதனாலுங் கொலைப்பாவம் வருமென்று கூறிற்று.
என்று கூறுவதால், குறளாசிரியர் பெளத்த தரிசனத்தை கடிந்தார் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி.
கொன்றாகும் ஆக்கங் கடை
அவ்வாறே, கொல்லாமை என்னும் அதிகாரத்தில்,
“நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை” – திருக்குறள் – 328
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரிதேயாயினும், ஓருயிரைக் கொன்று ஆகின்ற
ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது.
இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால்,
வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
என்று வேள்வியின் பொருட்டு இன்னுயிர்களை கொல்வதையும் கூடாது
என்று எடுத்துக் கூறி, குறளாசிரியர் வேத தரிசனத்தையும் கடிந்திருக்கிறார்
என்பது நிதர்சனம்.
முயற்றின்மை இன்மைப் புகுத்தி விடும்
ஆசிவகத் தரிசனத்தை கண்டித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலாக,
ஊழ்க் கொள்கையை நியதிக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஆசிவக
தரிசனத்தையும்,
“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்” – குறள் – 620
என்ற 620 ஆவது குறளிலும்,
“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”
என்ற 616 ஆவது குறளிலும் ஆசிவகத் தரிசனத்தைக் கண்டிக்கிறார் நம்
தேவர் பெருமான் (குறளாசிரியர்).
(என்ன முயற்சி செய்தாலும் ஊழிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பதுதான்
ஆசிவக தரிசனத்தில் கூறப்படும் முக்கியக் கோட்பாடு)
ஒன்றாக நல்லது கொல்லாமை
சமணத்தின் முதல் அறம் கொல்லாமை. இரண்டாவதாக சொல்லபடுவது
பொய்யாமை2 என்ற அறம். இதனை குறளாசிரியர்,
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”
என்ற 323 ஆவது குறளிலும்,
”தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை”
என்ற 327 ஆவது குறளில் கூறுவதாலும், சமண தரிசனமே
கொல்லாமை அறத்தை3 தங்கள் வேதமாகக் கொண்டிலங்குவதாலும்,
குறளாசிரியர் சமணத் தரிசன கோட்பாடுகளை, எல்லா தரப்பு மக்களும்
உய்யவேண்டி அக்கோட்பாடுகளுக்கு அழகான அணிக்களன்கள் பூட்டி,
நம் அனைவருக்கும் தந்தருளியிருக்கிறார். அவற்றை அணிந்து, ஆன்மப்
பயன் பெறுவோம்!
வாழ்க திருவறம்! வளர்க குறளறம்!!
இரா.பானுகுமார்,
சென்னை
=========================================================
குறிப்புகள்:
1. திரிகடுகப் பாடல்: http://banukumar_r.blogspot.com/2011/11/1.html
2. விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார் கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
கரையால் உணர்வினை அழியார்; அழிதசை
துவ்வார்; விடமென வெவ்வாறும்
புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
புகழார்; குரவரை இகழாரே” – திருக்கலம்பகம்
3. ”நசைகொல்லார் நச்சியார்க்கு என்றும் இளைஞர்
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் – மிசைகொல்லார்
பொன்பெறும் பூஞ்சுணங்கின் மென்முலையாய் நன்குணர்ந்தார்
என் பெறினும் கொல்லார் இயைந்து – சிறுபஞ்சமூலம் – 48
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Sir. Ur examples are help us to prove the Great Thirukural was written by a Samanar (Munivar) Thank u Sir. Sasi
Sir, Thank u For ur examples Which are help us to prove that the Great Thirukural Was Written by a Samanar (Munivar) . Sasi
Thank u Sir Thia examples are help us to prove the Thirukural was written by a Samanar. Sasi
Post a Comment